மந்திர பறக்கும் காலணிகள் - Tamil magical stories

Flying shoes story in Tamil


முன்னொரு காலத்தில் அழகிய மங்கலம் என்ற ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் ராமையா என்ற மீன் வியாபாரி ஒருவர் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு சொந்தபந்தம் என்று யாருமே இல்லை. அவர் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி அன்றாட உணவு உண்டு வந்தார். ராமையாவின் கடுமையான உழைப்பையும், நேர்மையான குணத்தையும் கண்டு பக்கத்து வீட்டுக்காரரான சுப்பையா என்பவர், ராமையாவுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார். ராமையா, சுப்பையா இருவரும் ஒருநாள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, அங்கு மிகப்பெரிய புயல் ஏற்பட்டது. அதன் காரணமாக இருவரும் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது அவர்கள் கரை திரும்ப முடியாமல் போய்விட்டது. இதனால் ராமையாவின் மனைவி தன் ஒரு குழந்தையுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார். மகனுக்கு 17 வயது இருக்கும் பொழுது ராமையாவின் மனைவி உயிர் துறந்தார்.

ராமையாவின் மகனின் பெயர் சக்திவேல். சக்திவேலுக்கு தாய் தந்தை தவிர வேறு உறவு இல்லாததால், தானே தினமும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வாழ்ந்து வந்தான். ஒருநாள் அடுப்பு எரிப்பதற்கு விறகு பொறுக்குவதற்காக காட்டுக்குள் சென்றான் சக்திவேல். அப்பொழுது இரண்டு நபர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை போட்டுக் கொண்டனர். அதைப் பார்த்த சக்திவேல் அவர்களிடம் சென்று, நீங்கள்  இருவரும் எதற்காக சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டான். அதில் ஒருவன் எங்களது தந்தை ஒரு மிகப் பெரிய மந்திரவாதி. அவர் எங்களுக்காக பறக்கும் காலனி, எது வரைந்தாலும் அப்படியே வந்துவிடும் ஒரு மந்திரக்கோல் மற்றும் மறையக் கூடிய ஒரு சட்டை என்று இதை மட்டுமே எங்களுக்கு சொத்தாக வைத்துள்ளார். எங்கள் இருவரில் யார் இந்த சொத்துக்கு உரிமை கொண்டாடுவது என்பதில் சண்டை வந்ததால் தான் நாங்கள் அடித்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். அந்த இடத்தில் புத்திசாலித்தனத்துடன் யோசித்த சக்திவேல் அவர்களுக்கு ஒரு யோசனை ஒன்றை சொன்னான்.

 நீங்கள் இப்படி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதற்கு பதிலாக, ஓட்டப் பந்தயம் வைத்து யார் வேகமாக ஓடுகிறார்களோ அவர்களுக்கு இந்த சொத்து கிடைக்கும் என போட்டி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னான். சக்திவேலின் அந்த யோசனை இருவருக்குமே மனநிறைவாக இருந்ததால் அவர்கள் இருவரும் போட்டிக்கு தயாரானார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என எண்ணிக்கொண்டு வேகமாக ஓடினார்கள். அப்போது சக்திவேல் அவர்கள் வைத்திருந்த மந்திர பொருட்களான மந்திர காலணிகள் அணிந்து கொண்டு, மறையக் கூடிய சட்டையும் போட்டுக்கொண்டு அங்கிருந்து பறந்து சென்று விட்டான். வெகு தூரம் சென்ற பிறகு சக்திவேல் ஒரு அழகிய கிராமத்திற்கு சென்றான். அங்கு சென்று ஒரு பாட்டி வீட்டில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது அந்த பாட்டி ஒரு விஷயத்தை சொன்னார். அதே அந்த ஊர் ராஜாவின் மகள் ஒரு வயதானவரை தான் திருமணம் செய்து கொள்வார் என முனிவர் ஒருவர் சொன்னதால், ராஜாவின் மகளை யார் கண்ணிலும் படாத வகையில் அந்நாட்டு மன்னர் மறைவாக வைத்திருக்கிறார் என்று சொன்னார். அதைக் கேட்டதும் சக்திவேலுக்கு அந்தப் பெண்ணை எப்படியாவது பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் தோன்றியது.

 சக்திவேல் தான் வைத்திருந்த மந்திர பொருட்களைப் பயன்படுத்தி இளவரசி இருக்கும் இடத்திற்கு பறந்து, மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து சென்றான். இளவரசி, சக்திவேல் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்தவுடனே காதல் கொண்டனர். சக்திவேல் தனது மந்திர பொருள்களை வைத்து இளவரசியை அங்கிருந்து காப்பாற்றி வேறு ஒரு மலைப் பிரதேசத்துக்கு கொண்டு சென்றான். அங்கே அவர்கள் வைத்திருந்த மண்டபத்தில் வைத்து சாப்பிட்டு வந்தாலும், இளவரசி ஒரு சொகுசான வாழ்வு வாழ்ந்ததால் முழு நிறைவு கிடைக்காமல் இருந்தார். அதைப் புரிந்து கொண்டு சக்திவேல் தனது கையில் வைத்திருந்த மந்திரக் கோலை பயன்படுத்தி ஒரு பெரிய கிராமத்தையும் அரண்மனையையும் வரைந்தான். அவன் வரைந்த அதைப்போலவே அந்த இடத்தில் அழகான கிராமமும், மிகப்பெரிய அரண்மனையும் ஒரு நொடியில் வந்து விட்டது. பிறகு மலைப்பிரதேசத்தில் வசிக்கும் காட்டு வாசிகளுக்கு வீடுகளை இலவசமாக கொடுத்து அவர்கள் இருவருமே ராஜா, ராணியாக அந்நாட்டில் வாழ்ந்து வந்தார்கள்.

இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அது ஒரு சில இடங்களில் நாம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் நம்முடைய வாழ்க்கையே ஆச்சரியமூட்டும் ஒன்றாக மாறிவிடும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அதனால் அனைவரும் எடுத்தோம் என ஒரு செய்தியை முடிவு செய்யாமல், முழுமையாக ஆராய்ந்து சிந்தித்து செயல்படுங்கள்.